திங்கள், 23 மார்ச், 2015

இடர்களையும்_பதிகம்‬

நமக்கு, விதி வசத்தால் வரும் இடர்களை எல்லாம் இந்த பதிகத்தை ஓதுவதால் வர விடாமல் செய்யலாம் . இடர்களையும் பதிகம் என்று இந்த பதிகத்தினை உயர்வாக அழைப்பர். இப்பதிகத்தில் உள்ள 10 பாடல்களிலும் இடர்களையாய் என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தை படித்து வந்தால் நலம் பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்



#இறைவர்_திருப்பெயர் : நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்
-
#இறைவியார்_திருப்பெயர் : மங்களநாயகி, ஒப்பிலா நாயகி
-

#பாடல்_எண்_01
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின் அல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
-

பொருள் விளக்கம்:
திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தியவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள் வாயாக.

----- ----- ----- ----- ----- -----

#பாடல்_எண்_02
கனைத்தெழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
-

பொருள் விளக்கம்:
திருநெடுங்களம் மேவிய இறைவனே, ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல் நஞ்சினைத் தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே, நின்னை மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல், பாடல்களை விரும்பி, இரவும் பகலும் நின்னையே நினைத்து எழும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.

----- ----- ----- ----- ----- -----

#பாடல்_எண்_03
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
-

பொருள் விளக்கம்:
திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்ல வந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, "என் அடியவன் உயிரைக் கவராதே" என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.

----- ----- ----- ----- ----- -----

#பாடல்_எண்_04
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்த இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
-

பொருள் விளக்கம்:
திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான் மகளாகிய பார்வதிதேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக

----- ----- ----- ----- ----- -----

#பாடல்_எண்_05
பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
-

பொருள் விளக்கம்:
திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவவேடம் தாங்கியவர்களும். பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடிகளை வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடி நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

----- ----- ----- ----- ----- -----

#பாடல்_எண்_06
விருத்தனாகிப் பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடி இணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
-

பொருள் விளக்கம்:
திருநெடுங்களம் மேவிய இறைவனே, மூத்த வேடந்தாங்கியும், இளமை வடிவங்கொண்டும், வேதங்கள் நான்கையும் நன்குணர்ந்த தலைவனாய் கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள பெருமானே, கலைஞானங்கள் மெய் ஞானங்களின் பொருளான முதற்கடவுளாய உன் அடி இணைகளைப் பரவி ஆடியும் பாடியும் போற்றும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

----- ----- ----- ----- ----- -----

#பாடல்_எண்_07
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
-

பொருள் விளக்கம்:
திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் வேதவழக்கோடு பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே, கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, இதுவே மணம் பொருந்திய சந்தனமாகும் என்று எம்பெருமானே நீ அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

----- ----- ----- ----- ----- -----

#பாடல்_எண்_08
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
-

பொருள் விளக்கம்:
திருநெடுங்களம் மேவிய இறைவனே, மேருமலையின் சிகரங்கள் மூன்றில் ஒன்றாகிய குன்றின் மேல் விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகர் மன்னனும், உன்னோடு மாறுபட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய இராவணனை அரிய அம்மலையின் கீழே அடர்த்தவனே! என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே ஏத்தி நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

----- ----- ----- ----- ----- -----

#பாடல்_எண்_09
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலாப் பொன் அடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
-

பொருள் விளக்கம்:
திருநெடுங்களம் மேவிய இறைவனே, கஞ்சனால் ஏவப்பட்டுத் தன்னைக் கொல்ல வந்த குவலயா பீடம் என்ற யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ் பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடு மாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினது கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன் போன்ற திருவடி நீழலில் வாழும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

----- ----- ----- ----- ----- -----

#பாடல்_எண்_10
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.
-

பொருள் விளக்கம்:
கொடுஞ் சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தமது வேடத்திற்குப் பொருந்தாமல் ஒழுகும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் சைவசமயம் கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள். அவர்களை விடுத்து, திருநெடுங்களம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய வேதங்களோடு, தோத்திரங்களால் நின்னைப் பரவி நின் திருவடிகளை நெஞ்சில் கொண்டு வாழும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

----- ----- ----- ----- ----- -----

#பாடல்_எண்_11
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன் நலத்தால்
நாட வல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே.
-

பொருள் விளக்கம்:
மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடை முடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும்.
-

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...! நமசிவாயம் வாழ்க...!
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
feeling blessed "பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி...!". 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக