திங்கள், 23 மார்ச், 2015

புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் !!!

புன்னகை மூலம் எதையும் சாதிக்கலாம் !!!

புன்னகை மனித இனம் மட்டுமே பெற்ற பெரும் பேறு. அது மனிதனுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது. பெண்ணின் பொன் நகையை விட புன்னகையை அனைவரும் விரும்புவர். எப்போதும் புன்னகையுடன் இருக்கும் முகம் தனிப்பட்டவரின் விலை மதிக்க முடியாத சொத்து. புன்னகை இல்லா முகம் வசீகரம் இல்லாத உடல் உறுப்பேயாகும்.

புன்னகை மனோதத்துவ ரிதியாகவும், சமூக ரிதியாகவும் மனிதனுக்கு நல்ல பலனைத்தரும். புன்னகை நல்ல சிந்தனைக்கு தூண்டுகோலாக அமையும். நல்ல நண்பர்களை ஈட்டித்தரும் மனிதருக்குள் நல்ல உறவை ஏற்படுத்தும், உணர்ச்சி வசப்படுவதை குறைக்கும், மனதில் மகிழ்ச்சியையும் உடலில் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். புன்னகை செய்பவர்கள் எளிதில் வசப்படுவார்கள். காதலர்களை இணைத்து வைக்கும் காந்த சக்தியே புன்னகை தான். வாழ்வில் தோல்வி, துன்பம் வரும்போது அதை எளிமைப்படுத்தி போக்குவது புன்னகையே.

புன்னகை உதட்டில் மட்டும் மலராமல் உள்ளத்தில் இருந்து வரவேண்டும். நீங்கள் புன்னகை செய்தால் உங்களைச்சுற்றி உள்ளவர்களும் புன்னகை செய்வார்கள்.

நீங்கள் புன்னகை செய்யுங்கள். உலகம் உங்களைப்பார்த்து புன்னகை செய்யும். நீங்கள் சோகமாக இருங்கள். யாரும் அதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று ரூவைட் என்னும் அறிஞர் கூறுகிறார். மனதை கட்டுப்படுத்த தெரிந்தவனிடம் மகிழ்ச்சியும் புன்னகையும் எப்போதும் இருக்கும்.
நிச்சயம் உன் செல்வத்தால் மட்டும் நீ மக்களுக்கு உதவி செய்ய முடியாது. எனவே புன்னகையுடனும் நற்பண்புகளுடனும் மற்ற வர்களுக்கு உதவு என்றார் ரூசோ. புன்னகை செய்வதில் தாராளமாக இருங்கள். நீங்கள் புன்னகை செய்யும்போது அடுத்தவரும் உங்களைப்பார்த்து புன்னகைப்பார். அதனால் புதிய உணர்வுகளும், உறவுகளும் தோன்றும். நல்ல சுறுசுறுப்பும், தெம்பும், புத்துணர்ச்சியும் ஏற்படும். நண்பர்களிடமும், உறவினர்களிடமும், புதியவர் களிடமும் பழக புன்னகை மிகவும் தேவை.

பிறரை சந்திக்கும்போதும், அவர்களிடம் பேசும்போதும், பணிகள் செய்யும்போதும் புன்னகையை பயன்படுத்துங்கள். பெற்றோர், உடன்பிறப்புக்கள், நண்பர்கள், அயலார், குழந்தைகள், அலுவலக நண்பர்கள் உடன் பணிபுரிவோர் அனைவரிடமும் புன்னகையுடன் பழகுங்கள். அதனால் மனக்கவலை, மன அழுத்தம், கருத்து வேற்றுமை, கடுகடுப்பு, கோபம், பதட்டம் எல்லாம் குறையும்.

தாராளமாக இருங்கள்
ஒரு நிமிடம் புன்னகை செய்யுங்கள். அந்த புன்னகை உங்களை தேடி மீண்டும் வரும். படிப்படியாக அடுத்தவர் உங்களைப்பார்த்து புன்னகைப்பார்கள். வாழ்க்கை முழுவதும் நீங்கள் புன்னகைப்பீர்கள். பிறரையும் புன்னகைக்க வைப்பீர்கள் என்று போடி என்ற அறிஞர் கூறுகிறார். புன்னகை செய்வதில் தாராளமாக இருங்கள். அப்போதுதான் பிறர் உங்களிடம் எளிதாக நெருங்கிப்பழகுவார்கள்.
எய்ட்சால் பாதிக்கப்பட்டவரை தேற்றும் மருந்து உங்கள் புன்னகையே. துக்கத்தை தவிர்த்து ஊக்கம் அளிப்பது உங்கள் ஆதரவே என அரசு விளம்பரம் செய்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்டுகிறது. உள்ளம் அழுதாலும், உதட்டில் புன்னகை செய் என்பார்கள். மனக்கவலையோடு துன்பப்பட்டு கொண்டி ருப்பவரை பார்த்து புன்னகை செய்தால் அவருக்கு மன ஆறுதலும், தன்னம் பிக்கையும், தன் துன்பத்தை பகிர்ந்து கொள்ள இவர் உதவுவார் என்ற எண்ணமும் ஏற்படும். அதனால் தனிமை என்ற எண்ணம் மாறும். துன்பம் குறையும்.

பலர் வாழ்வில் அதிகம் புன்னகை செய்வதே இல்லை. அவர்களிடமும் புன்னகையுடன் பழகுங்கள். ஒருவருக்கு மகிழ்ச்சியை தெரிவிப்பதாகவோ, நல் வாழ்த்துக்கள் கூறுவதாகவோ, நலம் விசாரிப்பதாகவோ, உதவி செய்வதாகவோ இருந்தால் அதை புன்னகையுடன் செய்யுங்கள். நாளடைவில் அவரும் உங்களைப்பார்த்து புன்னகை செய்ய பழகிக்கொள்வார்.
புன்னகை என்பது ஒருவரிடமிருந்து அடுத்த வருக்கு பரவக்கூடியது. பிறரிடம் உதவி கேட்கும் போதும் புன்னகை செய்கிறோம். அன்பு தொல்லை கொடுக்கும் போதும் புன்னகை செய்கிறோம். புன்னகைக்கு எந்த செயலையும் சாதிக்கும் சக்தி உண்டு.

புன்னகை உங்களுக்கு இயல்பாக வர வேண்டும். அதனால் முக அழகு கூடும். அனை வராலும் கவரப்படுவீர்கள். எட்டு மண்டை ஓடு எலும்புகளும் பதிநான்கு முக எலும்புகளும் சேர்ந்து, சதையால் ஆன உறுப்பே முகம். அது புன்னகை செய்ய 14 தசைகள் தேவைப்படு கின்றன. கீழ்த்தாடை எலும்புகளும், மேல்த் தாடை எலும்புகளும், தசைகளும் புன்னகை செய்ய மிகவும் உதவுகின்றன. மேலும் புன்னகை நன்கு அமைய நல்ல அழகான பற்கள் தேவை. முத்து முத்தான வெண்ணிற பற்களால் புன்னகை அதிக கவர்ச்சியைத்தரும். வெளி நாடுகளில் நடிகைகள் பிறை போன்ற வடிவங்களை தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்து பற்களில் பதித்துக் கொண்டு புது பேஷனாக புன்னகை அழகை காட்டுகிறார்கள். நம் நாட்டிலும் சிலர் தங்க பற்களைகட்டிக்கொள்கிறார்கள்.

மனதில் மகிழ்ச்சியை வைத்துக்கொண்டு எப்போதும் புன்னகையுடன் இருந்தால் ஆக்ஸிஜன் மற்றும் உணவில் உள்ள சத்துப் பொருட்கள் மூளைக்கு தொடர்ந்து புத்துணர்வை ஏற்படுத்தும். மந்தநிலை அகன்று சுறுசுறுப்பும், உற்சாகமும் அதிகரிக்கும். மனபதட்டமும் குறையும். முகத்தில் புன்னகையை தவழ விடும்போது மன இறுக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படும். மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்டோர்பின்கள் என்ற ஹார்மோன்கள் உருவாகி ரத்தத்தில் கலந்து உற்சாகத்தை ஏற்படுத்தும். அதனால் புன்னகை தோன்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக