திங்கள், 23 மார்ச், 2015

மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்!

மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்!

ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் ஆட்சி அதிகார எல்லை பரந்து விரிந்த பகுதியாகும். கடந்த 13ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு வீழ்ந்து, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்கு வந்தனர். இந்த காலகட்டத்தில் பாண்டிய மன்னர்களுக்கு கட்டுப்பட்டு சேதுபதி மன்னர்கள் ஆட்சி நடத்தினர். இதன் பின்பு பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தது.

அப்போது கடந்த 14ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சேதுபதி மன்னர்கள் வலுவடைந்து இந்த சீமையில் தன்னாட்சி நடத்தினர். இவர்கள் மறவர் இனத்தின் பிரதான கிளைகளில் ஒன்றான செம்பிநாட்டு மறவர் வகையை சேர்ந்தவர்கள்.

செம்பிநாடு என்பது சோழ நாட்டை குறிப்பதாகும். சேதுபதி மன்னர்கள் கோவில்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்களாகவும் வாழ்ந்துள்ளனர். இந்த மன்னர்கள் சைவம் சார்ந்தவர்களாக இருந்தாலும் வைணவ கோவில்கள், இஸ்லாமிய,கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் வாரி வழங்கி உள்ளனர்.
கி.பி.1658ல் மதுரை மீது மைசூர்காரர்கள் படையெடுத்தனர். அப்போது அந்த படையை சமாளிக்க முடியாமல் திருமலை நாயக்கர் திணறிய போது,ராமநாதபுரம் மன்னர் ரெகுநாத சேதுபதி 15 ஆயிரம் மறவர் படையினருடன் மதுரையைக் காக்க விரைந்தார். திண்டுக்கல் அருகே நடந்த போரில் மைசூர் வீரர்கள் தோல்வியடைந்து ஓட்டம் பிடித்தனர்.

இதே போல் கி.பி.1650ல் திருச்சி கோட்டையின் தளபதியான குஸ்தம்கான், திடீரென நாயக்கர் மன்னர் சொக்கநாதரை சிறைப்படுத்தி, திருச்சி கோட்டைக்குள் அடைத்து வைத்திருந்தான். இதைக் கேள்விப்பட்ட கிழவன் ரெகுநாத சேதுபதி, கன்னிவாடி பாளைக்காரருடன் திருச்சி சென்று தந்திரமாக குஸ்தம்கானை கொன்று, நாயக்க மன்னரை சிறை மீட்டார்.

கி.பி.1736ல் மதுரை நாயக்க வழியினரின் கடைசி அரசியான ராணி மீனாட்சி, வாரிசு இல்லாமல் இறந்தார். அவரது வளர்ப்பு மகனான விஜயகுமாரன், ஆட்சியை மேற்கொள்ள இயலாதவாறு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது சேதுபதி மன்னன் தன் தளவாயான வெள்ளையன் சேர்வையை, மதுரைக்கு அனுப்பி வைத்தார். மதுரை கோட்டையை ஆக்கிரமித்திருந்த மைசூர் மன்னரின் பிரதிநிதியான தளபதி கோப்பை, போரிட்டு தோற்கடித்து, ராணி மீனாட்சியின் வளர்ப்பு மகன் விஜயகுமாரனை மதுரை மன்னராக கி.பி 1751ல் முடிசூட்டி திரும்பினார் தளபதி.

இந்த சேதுபதி மன்னர்களின் வரலாற்றுச் சுவடிகளில் சுடர் விட்டுக் கொண்டிருப்பவர் தமிழ் மன்னர் ரெகுநாத சேதுபதி காத்த தேவர். இவரின் காலம் கி.பி.1693. இவரின் மனமகிழும் அன்பு காதலியின் பெயர் காதலி நாச்சியார். ராமேசுவரர் கோவிலில் வீற்றிருக்கும் பர்வதவர்த்தினியின் மறறொரு பெயர் மலைவளர் காதலி என்பதாகும். இந்த தெய்வீக திருநாமம் கொண்ட காதலி நாச்சியார், மாவீரன் ரெகுநாத சேதுபதி காத்த தேவரின் 2ம் மனைவி ஆவார்.

கள்ளர் இனத்து காதலி நாச்சியாரை, காதல் திருமணம் செய்து கொண்ட சேதுபதி மன்னர், காதலி நாச்சியாரின் அண்ணன் ரெகுநாத தொண்டைமானை சேது நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த திருமயம் கோட்டையின் தலைவராக்கினார். இதன் பின் ரெகுநாத தொண்டைமான் திருமயம் கோட்டையுடன் புதுக்கோட்டையையும் இணைத்து தனி அரசு ஏற்படுத்தினார்.
ராமநாதபுரம் அரண்மனையில் சேதுபதி மன்னரின் பட்டத்து ராணி மற்றும் காதலிகள் தங்கிய இடங்கள் ஒவ்வொன்றும் இன்றளவும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இல்லங்கள் போலவே உள்ளன. அந்த அளவுக்கு அன்றைய கட்டிட கலைஞர்கள் அந்தப்புரம் உள்பட அனைத்து கட்டிடங்களையும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளனர்.

அந்தப்புரத்தில் தங்கியுள்ள ராணிகள் மற்றும் காதலிகள் தோழிகள் புடைசூழ, யார் கண்ணிலும் படாதவாறு வந்து குளித்து நீராட, அரண்மனை மேற்குப்புறம் முகவை ஊரணியில் மாங்கனி வடிவில் கிணறு அமைத்துள்ளனர். இந்த கிணறு ராணிகள் நீந்திக்குளிக்கும் வகையில் அழகுற வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

கி.பி.1710ல் மன்னர் ரெகுநாத சேதுபதி மரணம் அடைந்தார். இதனால் மன்னரது மனைவிகளும் காதலிகளும் கதறி துடித்து கண்ணீர் விட்டு துடித்தனர். அரசரின் மரணத்தை தாங்க முடியாத அரசகுல மங்கைகள் தீக்குளித்து உயிர்தியாகம் செய்ய முடிவு செய்தனர். இதன் படி மன்னரின் 2 ராணிகள் மற்றும் காதலிகள் உள்பட 47 பேர் தீக்குளித்து மரணத்தை தழுவிக் கொண்டனர்.

சேதுபதி மன்னரின் அன்பிற்கினிய மனைவி காதலி நாச்சியார், அக்னி குண்டத்தில் புகும் முன்பு, அவரின் சகோதரர் புதுக்கோட்டை தொண்டைமானிடம் பிரியா விடை பெற்ற உருக்கமான காட்சிகள் ராமநாதபுரம் வரலாற்று புத்தகங்களில் சாட்சிகளாக உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக