செவ்வாய், 31 மார்ச், 2015

மூன்றாவது கண் !!!



மூன்றாவது கண் !!!

நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும் புருவங்களின் இடைநடுவே சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவு மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக்கண்” என்று பெயர். இதை மிக இலேசான சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.

இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர்த் துவாரத்திற்கும் மலத் துவாரத்திற்கும் இடையேயுள்ள மூலாதாரத்தில் ஊறும் விந்தாகிய குண்டலினி சக்தியை முதுகந்தண்டு எலும்புக்குள் உள்ள மிகச் சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப் பின்புறத்திலிருந்து நெருப்பாறு மயிர்ப்பாலம் என்னும் ரம்பப் பற்களைப் போல் சேர்ந்துள்ள சிரசின் நடு உச்சி மண்டை ஓட்டுக்குள் உள் விவேகத்திறமையாலும், குண்டலினியை எழுப்பிக் கொண்டு வந்தால் நெற்றிக்கண் திறக்கப்படுகிறது.

குண்டலினி சக்தியின் பிரதிபலிப்பு நம் தோற்றத்தில் பார்ப்பதென்றால், கண்ணுக்கு நேரே நான்கடி தூரத்தில் ஒரு நாக்கு பூச்சி அளவில் சிறு வளைவுகளும் சிறு கால்களைப் போன்ற கிளைகளும் 3 1/2 முதல் 4 அங்குல நீளத்தில் ஒன்று அல்லது இரண்டு தெரியவரும். இதில் சில பிரகாச அணுக்கள் கசகசா அளவில் இணைந்திருப்பதையும் பார்க்கலாம். இவை ஒரே நிலையாய் நிலைத்து நிற்கா, மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கும். தோன்றுவதும், பின் மறைவதும் இதன் தொழில். பக்தர்கள் யாவரும் இதைப்பார்க்கலாம்.

நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு அறிந்த ஞானாசி¡¢யரோடு இருபது வயதிற்குமேல் அறிவோடு விந்தும், தன் ஞாபகமும் கலந்தால் தான் முடிகிறது. இந்தக் கண் திறந்திருந்தால் அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை வாசி (பிரணாயாமம்) என்ற மூச்சுப் பயிற்சியாலும் மற்ற யோகங்களாலும் திறக்க முடியாது. நெற்றிக்கண் திறந்தபின் பிடரிக்கண்ணிலும் உச்சிக்கண்ணிலுமுள்ள வலம்புரிச் சுற்றும் ஆறாதாரத்தின் அறிவுப்பெருக்கமும் சோம வட்டமும் நன்றாய் தெரியும். நெற்றிக் கண்ணால் பல விஷயங்களை உணரமுடியும். பின் அதை, அனுபோகத்தாலேயே அறிய முடியும்.

நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே இல்லை. இந்த இடத்தை வணங்குகின்றோமென்று அவரவர்களுக்குத் தெரியாமலேயே சலாமென்றும், வந்தனமென்றும், நமஸ்காரமென்றும், கும்பிடுகின்றேனென்றும், சொல்லியும்; தங்கள் தங்கள் மத ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும், விபூதி அணிந்தும், நாமம் இட்டும் தங்கள் தங்கள் கையையும், சைகையையும், நோக்கங்களையும் காட்டுகின்றனர். அரசாங்கத்தன்மை பிறப்பதும், தடுக்க முடியாத வீரமுங் கோபமும் பிறப்பதும் அங்கிருந்தேயாகும். மிகுந்த கோபம் ஏற்படும்போது தத்தம் மூக்கு முனையைப் பார்த்தால் சாந்தம் ஏற்பட்டுவிடும்.

இந்த இடத்தில் பிறக்கும் சொற்கள் சமீப காலத்தில் பலித்தே தீரும். மிகப் பொல்லாதவனையும் அவன் நல்லவனாக வேண்டுமென்று அந்த இடத்திலிருந்து நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக் காலத்திலோ நல்லவனாகியே தீருவான் என்பது திண்ணம். ஆகையால்தான் இந்த இடத்திற்கு ஆக்கினை ஸ்தானம் என்று பெயர். ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும் உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு உபயோகித்துக் கொள்ளவேண்டும்.

மனிதன் ஆண்டவனை அறியவோ ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண் உணர்வால் பெறப்படும். உடம்பில் பல வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த உணர்ச்சியோடு உறங்கிவிட வியாதியனைத்தும் தீரும். இப்படி அனேக காரியங்கள் தானே உண்டாகும் சந்தர்ப்பங்களும் உண்டு.

பெரிய பெரிய சிற்பிகள் சித்தரிக்கும் சிலைகளுக்குங்கூட அச்சிலைகளின் மீது அன்பும், விசுவாசமும், பயபக்தியும் மக்களிடத்தில் கூட்டுவதற்கு வேண்டி அச்சிலைக்கு நெற்றிக்கண் திறப்பது என்று ஒரு சடங்கை பெரிய விசேடமாகக் கொண்டாடுவதுண்டு. இதைச் செய்ய அந்தச் சிலையை உருவாக்கிய சிற்பியை விட்டு வேறொரு ஆச்சாரியாரைக் கூப்பிடுவார்கள். அவன் அச்சிலைக்கு நெற்றிக்கண் திறந்து விட்டதாகப் பாவனை காட்டுங் காலத்தில் வருடக்கணக்கில் சித்தரித்த சிற்பியும் அச்சிலையை வணங்க ஆரம்பிக்கிறான். அதுபோன்று எப்படிப்பட்ட அறிஞனாயிருந்தாலும் அவனுக்கும் ஒரு குரு அவசியம். ஆகவே நெற்றிக்கண் உணர்வு உண்டாக்கக் குருவும், சிந்தனையும், வயதும் அவசியமாகும்.

உலகில் பலர் பலவிதமாகச் சொல்லுவார்கள். அனுபவமில்லாதவர்கள் சொற்களைக் கேட்பதைவிட, அனுபவமுடையவர்கள் சொற்களைக் கேட்பது உங்களுக்கு நலமாகும்.

நாயகன் செயல் நாயகன் செயலென்று நழுவவிடாமல், நல்லறிவாய் நாட்டம் கொண்டீர்களானால் நல்ல இடத்தில் நாயகனும் நாமும் ஒன்றே.

அதுபோல் உலகத்தில் மிகுதியான குணங்கள் உள்ளன. அந்த குணங்களுக்குரியவர் பலராவர். அவர்களை நீங்கள் குறை சொல்லாமல் அவர்களிடத்தில் உள்ள நல்ல குணங்களை மட்டும் கிரகித்துக்கொள்ளுங்கள்.

கடலில் உள்ள மீனானது கடல் உப்பில் சாராததுபோல் உலகத்திலுள்ள நல்லடியார்களாகிய நீங்கள், உலகத்திலுள்ளதீய செயல்களில் சாரவே மாட்டீர்கள்.

– குறிப்பு நான் கடவுள் புத்தகம்
https://suzhimunai.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக