திங்கள், 23 மார்ச், 2015

கைது செய்வதில் காவலர்களின் அதிகாரம்

கைது செய்வதில் காவலர்களின் அதிகாரம் சட்டப்படி அதிகாரம் பெற்ற அதிகாரிகள் ஒரு நபருடைய முழுச் சுதந்திரத்தை பறித்து வரும்படியாக பிடித்து வைத்தலே கைது எனப்படும். நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவானது சட்டப்படி இன்றி எவரொருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறித்தலாகாது என்று கூறுகிறது. அதாவது, சட்டத்தின் துணை கொண்டு ஒரு குற்றத்திற்காக ஒருவனை பிடித்து வைக்கிறார்கள் என்றால் அது கைது என்றும், அந்த செயல் சட்டப்படியான கைது என்றும் அழைக்கப்படும். கைது செய்யப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்ட பின்பு நீதித்துறை நடுவரின் முன்பு 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த வேண்டும். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு தேவையான சட்ட உதவியை வழங்குவதில் காவலர்கள் உதவி வேண்டும். இதுபோன்ற பல வகையான சட்ட விதிமுறைகளை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கைது வகைகள்: 1 குற்றவியல் துறை நடுவர் பிறப்பித்த பிடியாணையுடன் சட்டத்திற்குட்பட்டு கைது செய்தல் 2 பிடியாணையின்றி -சட்டத்திற்குட்பட்டு கைது செய்தல் கைதுசெய்வதற்குரிய சூழ்நிலைகள்: 1 ஒரு குற்றம் செய்ததன் பொருட்டு அந்த குற்றத்தின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடை பெறும்போது-அந்த நபர் நீதிமன்ற விசாரணைக்கு வரவில்லை என்ற நிலையில் அவரை கைது செய்யலாம். 2 குற்றங்களை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக கைது செய்யலாம் 3 ஒரு காவல் அதிகாரி சில சூழ்நிலைகளில் ஒருவரின் பெயரையும் முகவரியையும் கேட்கும்போது அவர் தெரிவிக்கவேண்டிய விவரத்தை தெரிவிக்க மறுத்தால் அவரை கைது செய்யலாம். 4 காவல் அதிகாரி ஒருவர் தன் பணியை மேற்கொள்ளும்போது எவராவது தடுத்தால் அவரை கைது செய்யலாம். 5 தப்பித்து செல்லக்கூடியவரை திருப்பி பிடிப்பதற்காக கைதுசெய்ய முடியும். கைது செய்யக்கூடியவரின் உரிமைகள்: 1 ஒருவரை கைது செய்யும் காவலர்கள் அவர் எக்காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை உடனடியாக கூறவேண்டும். இதை அறிந்து கொள்வதற்கு கைது செய்யப்பட்ட வருக்கு முழு உரிமை உண்டு. இது அடிப்படை உரிமையாகவும் அளிக்கப் பட்டுள்ளது. 2 ஜாமீனில் செல்ல உரிமையுண்டு (சூழ்நிலைக்கேற்ப) என்பதை காவலர்கள் கைது செய்யப்பட்டவருக்கு கூறவேண்டும் 3 கைது செய்யப்பட்ட நபரை காலதாமதமின்றி தகுந்த அதிகார வரம்புடைய குற்றவியல் துறை நடுவர் முன்பு கைது செய்த காவல் அலுவலர் ஆஜர்படுத்த வேண்டும். 4 நீதிமன்றத்தின் கவனத்திற்கு வராமல் தம்மை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்ககூடாது என்பதும் ஒரு உரிமை 5 தனது வழக்கறிஞர் எவரேனும் இருப்பின் அவரது உதவியை நாடும் உரிமை 6 மருத்துவர் ஒருவரால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கோரும் உரிமை போன்ற உரிமைகள் உண்டு. கைது மற்றும் காவலில் வைக்கும் சூழ்நிலைகளில் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்: நமது உச்சநீதிமன்றமானது 1997ம் ஆண்டு ஒரு வழக்கில் கைது மற்றும் காவலில் வைக்கும் சூழ்நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய பாது காப்பு நடவடிக்கைகளை எடுத்து உரைத்துள்ளது. கொடூரமாக மனிதாபிமானமற்ற நிலையில் அல்லது கேவலமாகக் காவல் துறையால் நடத்தப்பட்டாலோ விசாரணை அல்லது புலன் விசாரணை நடக்கின்றபோது சித்ரவதை நடந்திருந்தாலோ அது அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 21 வழங்குகின்ற உரிமையை மீறுவதாகும். இதுகுறித்து மேற்படி வழக்கில் உச்சநீதி மன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. நீதிபதிகள் குல்தீப்சிங் மற்றும் டாக்டர் ஏ.எல்.ஆனந்த் ஆகியோர் வழங்கிய இத்தீர்ப்பு குற்றவியல் நடைமுறைச்சட்ட வரலாற்றில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. கைது மற்றும் காவலில் வைக்கும் அனைத்து நேர்வு களிலும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் சட்டமாக்கப்படுகின்றவரை கீழ்க்கண்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்று 11 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் மேற்படி வழக்கில் கூறி உள்ளது. கைது செய்கின்ற அல்லது விசாரணை நடத்துகின்ற அதிகாரி தனது பெயர், பதவி ஆகியன தெளிவாக தெரியும்படி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும். விசாரணை மேற்கொள்ளும் அனைத்து அதிகாரிகளைப் பற்றிய விவரங்களும் பதிவேட்டில் பதியப்பட வேண்டும். கைதானவர் அதுபற்றிய விவரத்தை நண்பர், உறவினருக்கு தெரிவிக்க உரிமை உண்டு. கைது செய்ததிலிருந்து 8 மணி முதல் 12 மணி நேர அவகாசத்திற்குள் கைது செய்யப்பட்ட நேரம், இடம், காவலில் வைக்கப்பட்டு உள்ள இடம் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவரை கேள்வி கேட்டு விசாரிக்கின்றபோது விசாரணையின் முழு தும் இல்லாவிடினும் விசாரணையின்போது வழக்கறிஞரை சந்திக்கின்ற வாய்ப்புத்தரப்பட வேண்டும். இவை உள்பட 11 உத்தரவுகளை உச்சநீதி மன்றம் பிறப்பித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக