திங்கள், 23 மார்ச், 2015

போதிமரம்

போதிமரம்
என் நிழல் மொத்தமும்
பரப்பி
விழுதுக் கயிற்றைப் பூமிக்கனுப்பி
நிலத்தை அபகரித்துக்
கட்டிப் போட்டுக்
கிடக்குமென்
குதூகலமொருநாள்
சூறையாடப் படலாம் !
நிஜக் கனியுதிர்த்து
என்னிடம் காய்க்கா
வௌவால் கனிகளை
தலைகீழாய்த் தொங்கவிட்ட
களிப்புடன் -
எனையண்டிய
பறவைகளையும் , விலங்குகளையும்
அரவணைத்து அணைத்துக்
கிடக்குமென்
ஆனந்தமொருநாள்
களவாடப் படலாம் !
ஊடுருவும் சூரியஒளி
இலைபரப்பிய கிளைகளின்
இடைவெளி புகுந்த
வெளிச்சப் பொத்தல்கள்
தரைக் கம்பளப் பூக்களென
பூமி பரவிக் கிடக்க -
சில கீறல்களுடனும்
பல வெடிப்புகளுடனும்
ஏனையற்ற பொந்துகளினூடும்
என் சிறு கனியின்
அளவு மதிப்பீட்டில்
சற்றும் கவலைகொள்ளது
உரு பெரும் பச்சைக் குடைவிரித்து
பரவிக் கிடக்குமெந்தன்
பசுமையொரு நாள்
பந்தாடப் படலாம் !
என் கிளை புஜங்கள்
ஏதாவதொரு
கோடாரிக் கையினால்
வெட்டி வீழ்த்தப்பட்டு
கொழித்துக் கிடக்குமெனது உடல்
துண்டு துண்டுகளாய்
அறுத்துச் சாய்க்கையில்
கசியுமெனது கண்ணீர்
கணக்கெடுத்துக் கொள்ளப்படாது -
எனது ஆண்டுவளைய
வயதிற்கேற்ப வகை பிரித்து
நாற்காலியாக்கி
என்னில் நீங்கள் அமரலாம்
கதவாக்கி
எனை நீங்கள் திறக்கலாம்
கட்டிலாக்கி
என்னில் நீங்கள் துயிலலாம்
ஊஞ்சலாக்கி
என்னில் நீங்கள் சாய்ந்தாடலாம்
ஆனால் -
விழுதுக் கரம் கூப்பித் தொழுகிறேன்
தயை செய்து என்னிலிருந்து
ஒரு கோடரிக் கனையை
உருவாக்கி விடாதீர்கள்
ஏனெனில் -
நீங்கள் எங்களை
வெட்டும் ஒவ்வொரு வெட்டிலும்
சூரியன்
உங்கள் சந்ததியினருக்கெதிராக
ஒவ்வொரு குற்று
கனல்களை தயாரித்துக்
கொண்டிருக்கிறான் !
உங்களில் எத்தனைபேர்
புத்தனாவீர்கள்
தெரியாது
ஆனால்
எங்களில் எல்லா மரமும்
ஒவ்வொரு போதிமரமே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக